Last Updated:
ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த நீரில் சுமார் 24 ஆயிரம் கோடி கன மீட்டர் நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுத்துவதால் இம்முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
நாடு முழுவதும் விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி வசூலிக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், மத்திய அரசு அதனை மறுத்துள்ளது.
நீர் வீணாவதையும், அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதையும் தடுக்கும் வகையில் விவசாயிகளிடமிருந்து நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு வரி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த நீரில் சுமார் 24 ஆயிரம் கோடி கன மீட்டர் நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலையில் இம்முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஒட்டுமொத்த நிலத்தடி நீர் பயன்பாட்டில் விவசாயத்துக்கு மட்டும் 83 சதவீதம் உறிஞ்சப்படுவதாகவும் இதனால் பயன்படுத்தும் தண்ணீருக்கான வரியை மாநில அரசுகள் நிர்ணயம் செய்யும் எனவும் தகவல்கள் வெளியான. இந்தத் தகவல் தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது, உரங்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில் நிலத்தடி நீருக்கும் வரியா என கேள்வி எழுப்பிய விவசாயிகள், இதனை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு இம்முடிவைக் கைவிட வேண்டும் என விவசாயிகளுடன் சேர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.
இத்திட்டத்தை எதிர்த்து கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவோம் என கூறிய மத்திய பாஜக அரசு, அவர்களின் சுமைகளைத்தான் இரட்டிப்பாக்கியுள்ளது என விமர்சித்தது. இனிமேல் மழைக்கும் கூட பாஜக அரசு வரிவிதிக்குமா எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள நீர் மேலாண்மை திட்டமானது, நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயம் மற்றும் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் நீர் ஆகியவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வரி குறித்துப் பரவி வந்த தகவல்களால் கலக்கத்தில் இருந்து வந்த விவசாயிகள், தற்போது மத்திய அரசு தந்துள்ள விளக்கத்தால் நிம்மதி அடைந்துள்ளனர்.
June 29, 2025 7:35 AM IST

