Last Updated:
Hyderabad accident | ஹைதராபாத்தின் கூக்கட்பள்ளியில் நடந்த இந்த விபத்தில் தாய் கிருத்திகா (வயது 30) உயிரிழந்தார். அவரது மகன் மாதவ் (வயது 3) படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஹைதராபாத்தில் சாலையில் குழந்தையை தூக்கி வைத்து கொண்டு நின்ற பெண்ணின் மீது சரக்கு வாகனம் தூக்கி வீசிய காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த அமித் தன்னுடைய மனைவி கிருத்திகா, மகன் மாதவ் ஆகியோரோடு துல்ஜாபூரில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு அம்மனை தரிசித்து விட்டு காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
ஆனால் அவர்களது கார் நடுவழியில் பழுதடைந்து நின்று விட்டது . இந்த நிலையில் கிருத்திகா தனது மகனுடன் காரில் இருந்து இறங்கி கார் அருகேயே நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் அமித் காரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த ஒரு போலிரோ சரக்கு வாகனம் ஒன்று கிருத்திகா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த கோர விபத்தில் கிருத்திகா, அவருடைய மகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். கிருத்திகா சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில் அவருடைய மகன் மாதவ் படுகாயம் அடைந்து துடிதுடித்து கொண்டிருந்தார்.
அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து இரண்டு பேரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த கூக்கட்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விபத்தின் கோர சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்கிறது.
June 25, 2025 4:26 PM IST

