Last Updated:
விமானத்தின் கருப்புப் பெட்டி விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் என்ற செய்திகளை அமைச்சர் நிராகரித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை இந்தியாவில் மட்டுமே நடத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு சமீபத்தில் புனேவில் தெரிவித்துள்ளார். விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே உள்ளதாகவும், விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) அதை விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கருப்புப் பெட்டி விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் என்ற செய்திகளை அமைச்சர் நிராகரித்துள்ளார். இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
புனேவில் நடைபெற்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமான உச்சி மாநாடு 2025 நிகழ்வில் மத்திய அமைச்சர் நாயுடு கூறியுள்ளார். விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கருப்புப் பெட்டி உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 12ஆம் தேதியன்று அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தில் மோதியது. இந்த விமானம் லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 270க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார். AI-171 விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். விபத்து நடந்த இடத்திலிருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது.
கருப்புப் பெட்டி என்பது விமானத்தின் பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய ஆரஞ்சு நிற சாதனமாகும். இது விமானம் பறக்கும்போது அனைத்து தொழில்நுட்ப தகவல்களையும், காக்பிட் உரையாடல்களையும் பதிவு செய்து பாதுகாக்கிறது. இது விமான விபத்துகளுக்குப் பிறகு ஏற்படும் காரணங்களை ஆராய உதவுகிறது.
கருப்புப் பெட்டி மிகவும் மோசமாக எரிந்து போனதால், அது ஆய்வுக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் என்று முந்தைய ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. இது குறித்து அமைச்சர் நாயுடு கூறுகையில், இவை அனைத்தும் ஊகம். கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே உள்ளது, AAIB அதை விசாரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
கருப்புப் பெட்டி டேட்டா எப்போது கிடைக்கும் என்று கேட்டபோது, அது ஒரு தொழில்நுட்ப விஷயம் என்றும், AAIB விசாரித்து முழு செயல்முறையையும் முடிக்கட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது என்றும், விசாரணை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. கருப்புப் பெட்டியை டிகோட் செய்வது விமான விபத்துக்கு சற்று முன்பு என்ன நடந்தது என்பது பற்றிய ஆழமான தகவல்களை வழங்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நாயுடு முன்பு கூறியிருந்தார்.
அகமதாபாத் விமான விபத்து:
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதியது. இந்த விபத்தில் போயிங் 787-8 (AI 171) விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பயணிகளும் மற்றும் பணியாளர்களும், தரையில் இருந்த 5 MBBS மாணவர்கள் உட்பட 29 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
June 25, 2025 1:43 PM IST
விமானத்தின் கருப்புப் பெட்டி வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதா…? விமான போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

