Last Updated:
ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் அவரது நற்பெயருக்கு களங்கம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கும் ஏடிஜிபி ஜெயராமை, பணியிடை நீக்கம் செய்தது, அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் மற்றும் மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆள் கடத்தல் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது தவறானது என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மூத்த காவல்துறை அதிகாரி மீது இது போன்ற நடவடிக்கைகள் ஏன் என்று கேள்வி எழுப்பினர். விசாரணைக்கு ஒத்துழைக்கும் அதிகாரியை கைது செய்ய உத்தரவிட்டு, பணியிடை நீக்கம் செய்வது அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
18 ஆண்டுகளாக தான் நீதிபதியாக இருப்பதாக கூறிய மன்மோகன், இது போன்ற கைது நடவடிக்கைக்கு அதிகாரம் உள்ளதா என்று தனக்கு தெரியவில்லை என்றார். மூத்த காவல்துறை அதிகாரி விசாரணைக்கு ஒத்துழைக்கும் நிலையில், இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
அப்போது, ஏடிஜிபி ஜெயராமின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக அரசிடம் கேட்டு உரிய பதில் அளிப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளைக்கே உரிய விளக்கத்தை தர வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
June 18, 2025 2:18 PM IST

