இந்த நிலையில், ’ஏர் இந்தியா’ நிறுவனம் இயக்கும் ‘போயிங் 787- 8’, ‘போயிங் 787- 9’ ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, எரிபொருள் சோதனை, கேபினின் காற்றழுத்தம், எலக்ட்ரானிக் என்ஜின் கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகள், Take off தொடர்பான சோதனை, ஹைட்ராலிக் சோதனை உள்ளிட்ட 6 வகையான சோதனைகளை விமானம் புறப்படும் முன்பு மேற்கொள்ள வேண்டும் எனவும், விமான கட்டுப்பாட்டு ஆய்வுகளை மறு உத்தரவு வரும் வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி காம்பெல் வில்சன் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, விமான விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் காம்பெல் வில்சன் விவரித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடியிடம் காம்பெல் வில்சன் உறுதி அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், வெளிப்படை தன்மையுடன் இருப்பதாகவும் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாடா குழும ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சந்திரசேகரன், அகமதாபாத்தில் நடந்த விபத்து, டாடா குழுமத்தின் வரலாற்றில் ஒரு இருண்ட நாள் என பதிவு செய்துள்ளார். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தராது என்ற போதிலும், விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் அன்புக்குரியவர்களுடன் துணை நிற்பதாக சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றும், அதற்காக உள்நாட்டில் மட்டுமின்றி இங்கிலாந்து, அமெரிக்காவில் இருந்து புலனாய்வுக்குழுக்கள் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எங்கே தவறு நடந்தது என்பதில் வெளிப்படையாக இருப்போம் என்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உறுதியளித்துள்ளார். ஏர் இந்திய விமான விபத்தால் ஏற்பட்ட பெரும் இழப்புகளை தாங்கள் கட்டாயம் சுமப்போம் என்றும், அதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து பல்வேறு ஊகங்கள் இருக்கலாம், அவற்றிற்கு செவிக் கொடுக்காமல், உண்மையான காரணம் கண்டறியும் வரை பொறுமை காப்பதே சிறந்தது என்றும் சந்திரசேகரன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
June 14, 2025 7:25 AM IST
