Last Updated:
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி விபத்து இடத்தை ஆய்வு செய்து, உயிர் தப்பிய ஒரே பயணி மற்றும் காயமடைந்த மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு மேலெழும்ப முடியாமல் தாழ்வாக பறந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை.
இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுகீசியத்தைச் சேர்ந்த 7 பேர், 2 விமானகிள், 10 பணியாளர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் சிக்கி குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் இருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் எரிபொருள் எரிந்ததால் வெப்பநிலை உச்சத்தை எட்டியதாகவும், இதனால், பயணிகளை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், அகமதாபாத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை ஆய்வு செய்தார். குறிப்பாக, விமானத்தின் முகப்பு பகுதி சிக்கிக் கொண்டு இருக்கும் பி.ஜே.மருத்துவக் கல்லூரி கட்டடத்தையும் பிரதமர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து, விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே ஒரு பயணியான விஸ்வாஷ் ரமேஷ் குமாரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இதேபோன்று, கட்டடத்தின் மீது விமானம் மோதியதில் படுகாயம் அடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.
June 13, 2025 12:59 PM IST
