ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்னர் கடைசி 5 நிமிடங்கள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. சுமார் 12 ஆண்டுகள் விமான சேவையில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த விமானம் முந்திய நாள் வரை சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. ஒரு போயிங் ரக பயணிகள் விமானத்தில் ஒவ்வொரு முறை பறப்பதற்கு முன்னரும் 5 கட்ட சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.
வடிவமைப்பு மற்றும் பொறியியல் சோதனை, தரை ஓட்டச் சோதனை, பறக்கும் சோதனை, விபத்து ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வு உள்ளிட்ட சோதனைகளை அதற்கென நியமிக்கப்பட்ட சிறப்பு நிபுணர்கள் மேற்கொள்வார்கள். விமானத்தின் வடிவமைப்பு, அதன் பாகங்கள், மற்றும் பொறியியல் அம்சங்கள் போன்றவை முதல் கட்டச் சோதனையில் சரிபார்க்கப்படும். விமானத்தின் இயந்திரங்கள், மின்சாரம், ஹைட்ராலிக்ஸ் போன்றவற்றை 2-ம் கட்ட கிரவுண்ட் டெஸ்டிங்கில் சோதிக்கப்படும்.
3-ம் கட்டமாக விமானத்தின் பறக்கும் திறன் சோதிக்கப்படும். ஒருவேளை விமானம் விபத்துக்குள்ளானால் அதன் காரணங்களை ஆராயும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நான்காம் கட்ட ஆய்வில் சோதிக்கப்படும். விமானத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், விமானத்தின் செயல்பாட்டின் போது ஏற்படும் ஆபத்துகள் போன்றவை 5-ம் கட்டச் சோதனையில் உறுதி செய்யப்படும். இத்தனை சோதனைகளுக்குப் பிறகு அனைத்து நிபுணர்களும் அனுமதி கொடுத்த பின்னரே ஒரு போயிங் ரக பயணிகள் விமானம் பறப்பதற்கு அனுமதிக்கப்படும்.
அந்த வகையில் அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட விமானம் 5 வகையான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே புறப்படுவதற்குத் தயாரானது. இந்த விமானத்தை ஓட்டிய விமானிகளும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் நிலை விமானி கிளைவ் குந்தர் ஆகிய இருவருக்கும் 9,300 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் உள்ளதாகச் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவமும், துணை விமானி கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேர விமானப் பயண அனுபவமும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. விமான நிலையத்தின் 23-வது ஓடுதளத்தில் விமானம் புறப்பட்ட போது அனைத்தும் சரியாகவே இருந்துள்ளது. விமானம் டேக் ஆஃப் ஆனது முதல் தான் அதில் இருக்கும் குறைபாட்டை விமானி உணர்ந்துள்ளார். 3-வது நிமிடத்தில் அவர் அவசர கால அழைப்பான ‘மேடே’ சமிஞையை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அவசரமாகக் கொடுத்திருக்கிறார்.
இந்த மேடே அழைப்பு என்பது, உயிருக்கு ஆபத்தான அவசர கால நிலை மற்றும் உடனடி உதவி தேவை என்பதைக் குறிக்கும் வகையில், சர்வதேச அளவில் விடுக்கப்படும் ஒரு ஆபத்துக் கால சமிஞை ஆகும். மூழ்கும் கப்பல், விமான விபத்து அல்லது தீ விபத்து போன்ற உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படும் போது, ‘மேடே’ அழைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவசரத்தை வலியுறுத்துவதற்காக “மேடே” என்ற சொல் மூன்று முறை மீண்டும் மீண்டும் கூறப்படும். இந்தச் சொல் “மைடெஸ்” என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 1927-ம் ஆண்டு முதல் சர்வதேச ஆபத்துக் கால சமிஞையாக இந்த வார்த்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அகமதாபாத் விமான விபத்தின் போது இந்த ஆபத்துக் கால சமிஞை விடுக்கப்பட்ட போதும், விபத்தைத் தவிர்ப்பதற்கான நேரமோ? தகவல் தொடர்போ விமானக் கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில் மேடே அழைப்பு வந்த சில நொடிகளில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதற்குள் விமானம் சுமார் 800 அடி உயரத்தில் தள்ளாட ஆரம்பித்தது. எரிபொருளுடன் சேர்ந்து சுமார் 320 டன் எடை கொண்ட விமானம் அதற்குமேல் பறக்க முடியாமல் தரையிறங்க ஆரம்பித்தது. விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேகானி நகர் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது. விமானத்திலிருந்த சுமார் ஒரு லட்சம் லிட்டர் எரிபொருளும் ஒரே நேரத்தில் வெடித்ததில் பயணிகள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
பொதுவாக ஒரு விமானத்திலிருந்து மே டே அழைப்பு வந்தால் முதலில் விமானத்தைக் காப்பாற்ற அதிலிருக்கும் எரிபொருளை வெளியேற்றும் பணியைத்தான் முதலில் மேற்கொள்வார்கள். ஆனால் அதற்கான நேரம் கிடைக்காத நிலையில் அகமதாபாத் விமானம் பெரும் விபத்துக்கு ஆளாக நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மட்டுமின்றி விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்த மாணவர்களும் உயிரிழந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. முதல் கட்டமாக பி.ஜே மருத்துவக் கல்லூரி சார்பில் 20 மாணவர்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
சீராக இயங்கிக் கொண்டிருந்த போயிங் விமானம் திடீரென விபத்தில் சிக்கக் காரணம் என்ன? 5 கட்டச் சோதனைகளை முடித்த பின்னரும் அதில் இருந்த தவறு தெரியாமல் போனது எப்படி? விபத்து நேரும் அளவுக்கு விமானத்தில் இருந்த முக்கிய தொழில்நுட்பக் கோளாறு என்ன? விமானிகளின் கடைசிக் கட்ட ஆபத்துக் கோரிக்கைகள் என்ன? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விமானத்தில் இருந்து மீட்கப்படும் கருப்புப் பெட்டியில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ahmedabad (Ahmedabad) [Ahmedabad],Ahmedabad,Gujarat
June 12, 2025 8:30 PM IST
