Last Updated:
கேரளாவில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற சரக்கு கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்தது எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி.வான் ஹாய் என்ற சரக்குக் கப்பல், கடந்த சனிக்கிழமை சரக்குகளை ஏற்றிக் கொண்டு, இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. சுமார் 270 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் பைபோர் மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து 78 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வந்து கொண்டிருந்தபோது கப்பலில் இருந்த சரக்கு பெட்டிகள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தீ, மளமளவென மற்ற சரக்கு பெட்டிகளுக்கும் பரவியது.
தீப்பிடித்து எரிந்த கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்த நிலையில் 18 பேரை இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்நிலையில் மாயமான 4 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கப்பலில் பற்றிய தீயை அணைக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் முடுக்கி விடப்பட்டன.
இதனிடையே இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அழிக்கல் துறைமுக அதிகாரி கேப்டன் அருண் குமார், தீப்பிடித்த சரக்கு கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் ரசாயன பொருட்கள் இருந்ததாக கூறியுள்ளார். தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்து மாயமான நான்கு பேரில் இருவர் தைவான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் இந்தோனேசியா நாட்டையும் மற்றொருவர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நான்கு பேரையும் மீட்கும் பணியில் கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் ஈடுபட்டுள்ளது. கேரள கடற்பகுதியில் கடந்த மாதம், லைபீரியா கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தற்போது சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
June 10, 2025 8:21 AM IST

