Last Updated:
உள்ளூர்வாசிகளை தவிர்த்து வெளியூர் நபர்கள் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்தனர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தை தானாக முன்வந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கு விசாரணையின்போது அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
இதனையடுத்து, பெங்களூருவில் நேற்று வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆர்.சி.பி. அணி ரோடு ஷோ நடத்தினால் பெரிய அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ரோடு ஷோவுக்கு கர்நாடக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆர்.சி.பி. அணிக்கு மட்டும் பாராட்டு விழாவாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதே நேரத்தில், மைதானத்திற்கு வெளியே இலட்சக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஆர்.சி.பி. அணி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் உயிரிழந்த விவகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது பொறுப்பு தலைமை நீதிபதி காமேஷ்வர் ராவ், சி.எம்.ஜோஷி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த உயிரிழப்பை தடுத்திருக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? எதிர்காலத்தில் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் மக்கள் கூட்டம் பெங்களூரு மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து விட்டனர்.
உள்ளூர்வாசிகளை தவிர்த்து வெளியூர் நபர்கள் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்தனர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டது என்றார்.
தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதிகள் விழாவை நடத்தியது கர்நாடக அரசா? அல்லது கிரிக்கெட் வாரியமா? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பிலிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் செவ்வாய் கிழமை அன்று ஒத்தி வைத்தனர்.
June 05, 2025 5:13 PM IST
விழாவை நடத்தியது கர்நாடக அரசா? கிரிக்கெட் வாரியமா? 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

