Last Updated:
இது என்ன மாதிரியான அலட்சியம்? அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன, குழந்தைகள் உட்பட பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என கர்நாடகா பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
18 வருட ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக இந்த ஆண்டு கோப்பையை வென்றது. பல முறை எதிர்பார்த்து கிடைக்காமல் போனதை இந்த முறை தட்டித் தூக்கியது ஆர்சிபி அணி. நேற்றைய ஆட்டத்தின் இறுதிப் பந்தின் போது, அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மைதானத்திலேயே கண் கலங்கிய நிகழ்வும் நடைபெற்றது.
முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்டதில் இருந்து 17 வருட ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஒரு முறைகூட அந்த அணி கோப்பையை வெல்ல முடியாமல் போனது. அதேபோல், கடந்த 9 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும், கோப்பையை வென்றது.
இதனால், அந்த அணியின் வீரர்கள், நிர்வாகத்தினர் மட்டுமின்றி அதன் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். நேற்று இரவு பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஆர்சிபி கோப்பையை வென்றதில் இருந்தே அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக இன்று ஆர்சிபியின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் அந்த அணிக்கு கர்நாடகா அரசு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பாராட்டு விழா பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பெங்களூரு விமான நிலையம் வந்த ஆர்சிபி அணியை அந்த மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டமும், பாராட்டு நிகழ்வும் மைதானத்தில் நடந்தது.
இதேசமயத்தில் 18 வருடங்கள் கழித்து கோப்பையை வென்ற தங்கள் அணியைப் பார்ப்பதற்கும், வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 நபர்கள் அங்கு பலியாகியுள்ளனர். மேலும், கூட்டத்தில் சிக்கி பலர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சோக நிகழ்வு குறித்துப் பேசிய அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “ஆர்.சி.பி மற்றும் கர்நாடகாவை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இது 18 ஆண்டுகள், நீண்ட போராட்டம். இது கட்டுப்படுத்தக்கூடிய கூட்டம் அல்ல என்று நினைக்கிறேன். பெங்களூரு மற்றும் கர்நாடக மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஊர்வலம் செல்ல விரும்பினோம். ஆனால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இப்படியான கூட்ட நெரிசல் மற்றும் பலி குறித்துப் பேசியுள்ள அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, “எந்தத் திட்டமிடலும், முன்னேற்பாடும் இன்றி இவ்வளவு பெரிய நிகழ்வை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என்கிற நிகழ்வு குறித்து, அவர்களுக்குத் தெரியாதா? பாதிக்கப்பட்ட சிலரிடம் நான் இப்போதுதான் பேசினேன், அங்கு அவசர ஊர்தியும் இல்லை, காவல்துறையினரும் மைதானத்தில் இல்லை. இது என்ன மாதிரியான அலட்சியம்? அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன, குழந்தைகள் உட்பட பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மாநில அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீவிரத்துடன் கையாள வேண்டும் என்று நான் முதலமைச்சர் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
June 04, 2025 7:44 PM IST
“இது என்ன மாதிரியான அலட்சியம்? அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன” – காங்கிரஸ் அரசு மீது பாஜக தாக்கு

