பாமகவில் உள்கட்சி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது.
ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தபோது இந்த கருத்து மோதல் தொடங்கியது.
பின்னர் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். பாமக தலைவராக தானே செயல்படப்போவதாகவும் அறிவித்தார். அதன் பிறகு ராமதாஸ் நடத்திய கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அன்புமணி ஆதரவாளர்கள் பலரும் ராமதாஸின் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், ‘அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன். கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். அவருக்கு தலைமைப் பண்பு இல்லை, இன்னும் பக்குவப்படவில்லை, பாஜக கூட்டணிக்காக என்னிடம் காலில் விழுந்து கெஞ்சினார்’ என அன்புமணி மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், ‘இனிமேல் அன்புமணி, செயல் தலைவர் பதவியை ஏற்று செயல்படுவது மட்டுமே தற்போதைய பிரச்னைக்கு முழுமையான தீர்வு’ என்றும் கூறியிருந்தார்.
எனினும் பாமக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி அன்புமணி ராமதாஸ் சென்னை சோழிங்கநல்லூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இன்று முதல் 3 நாள்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தவுள்ளார்.
