Last Updated:
மணிப்பூரில் 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முதல்வர் பிரேன் சிங் தலைமையில் ஆட்சி அமைய இருப்பதாக தகவல்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சர் ஆட்சி அமைய இருக்கிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு இணையச் சேவை தடை செய்யப்பட்டது. பிறகு இணையச் சேவை கொடுத்த பிறகு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் இரு பெண்கள் ஆடைகள் அற்று சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியது. அதுவே அந்த மாநிலத்தின் கோர நிலைமையை உலகுக்குக் காட்டியது.
அதன்பிறகு பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக மணிப்பூரில் கலவரங்கள் ஓய்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பி வந்தனர். ஆனால், அவ்வப்போது ஆங்காங்கே சில தாக்குதல் சம்பவங்கள் மணிப்பூரில் நடந்து வந்தது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் முதல்வர் பிரேன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி காலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அன்று மாலையே மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவை நேரில் சந்தித்தார். அப்போது பிரேன் சிங், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார்.
பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா என விவாதங்கள் எழுந்து வந்தன. பிரேன் சிங் ராஜினாமா செய்த பிறகு புதிய முதல்வரை பா.ஜ.க. தேர்வு செய்யாததால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில், தற்போது மொத்தம் 59 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 32 மெய்தி எம்.எல்.ஏ.க்கள், மூன்று மணிப்பூரி முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒன்பது நாகா எம்.எல்.ஏ.க்கள் என இணைந்து 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அங்கு முதலமைச்சர் ஆட்சி அமைய இருக்கிறது.
இதற்கான கோரிக்கையை அம்மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து மீண்டும் பா.ஜ.க.வின் முன்னாள் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் ஆட்சி அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

