தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துள்ளார்.
கேரளத்தில் தக் லைஃப் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய கமல்ஹாசன்,
கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் நான் கூறுவது பதில் அல்ல, விளக்கம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், ”பல மொழி வரலாற்று அறிஞர்கள் கூறியதைத்தான் நான் கூறினேன். தக் லைஃப் படத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகிறது. என் படத்தை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேசத் தகுதி இல்லை; ஏனெனில், இதில் அவர்களுக்குப் போதிய படிப்பினை இல்லை. இது எனக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் மேனனும், ரெட்டியும், கர்நாடக ஐய்யங்காரும் என பலரும் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முதல்வரால் எனக்குப் பிரச்னை வந்தபோதும் கூட, இங்கு வாருங்கள் என்று கன்னடர்கள் என்னிடம் கூறினார்கள்.
வடக்கில் இருந்துபார்க்கும்போது அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். தென்குமரியில் இருந்து பார்க்கும்போது நான் கூறியது சரியானதாக இருக்கலாம். ஆனால் மூன்றாவது கோணம் ஒன்று உள்ளது. அது மொழி அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் கூற வேண்டியது. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” எனக் குறிப்பிட்டார்.
