டெல்லியில் மே 24-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டோடு கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், மே 24-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கிறார்.
ஸ்டாலினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்.
அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்… இன்று… டாஸ்மாக்… தியாகி… தம்பி… வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?” என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய ஸ்டாலின், “சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
`பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?” என்று விமர்சித்தார்.
