Last Updated:
பெங்களூரு எஸ்பிஐ வங்கி மேலாளர், வாடிக்கையாளர் கன்னடத்தில் பேச சொன்னபோது, “நான் இந்தியில் தான் பேசுவேன்” என பதிலளித்தார். இதனால் மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் சமீபகாலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையேயான பிரச்சனை அவ்வப்போது எழுந்துவருகிறது. குறிப்பாக தேசியக் கல்வி கொள்கையில் மூன்றாவது மொழி தொடர்பான விவாதம் எழுந்ததில் இருந்து அம்மாநிலத்தில் மொழி குறித்தான பிரச்சனைகள் இன்னும் தீவிரமாக எழுந்துவருகிறது.
உதாரணத்திற்கு கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை பகுதியை ஒட்டி இருக்கும் பெல்காவி பகுதியில் பேருந்தில் ஏறிய சிறுமி இந்தியில் பேச அதற்கு அந்தப் பேருந்து நடத்துநர் கன்னடத்தில் பேச சொல்ல அது பெரும் பரபரப்பானது. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் இளைஞர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரிடம் இந்தியில் பேசி தகராறானது என அடுத்தடுத்த நிகழ்வுகள் அந்த மாநிலத்தில் நிகழ்ந்துவருகிறது.
இந்த வரிசையில், நேற்று இணையத்தில் வெளியான ஒரு காணொளி மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் இந்தி – கன்னட மொழி பிரச்சனையை காட்டியது. அந்த வீடியோவில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என சொல்ல, அந்த வங்கி மேலாளரோ, “நான் ஒருபோதும் கன்னடத்தில் பேச மாட்டேன். இந்தியில் தான் பேசுவேன்” என அவரிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துவந்தன. குறிப்பாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா, தனது எக்ஸ் பக்கத்தில், அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும், உள்ளூர் மொழிகளை வங்கி ஊழியர்கள் மதித்தால் மக்களை மதிப்பதாக அர்த்தம் என்றும், அதனை வங்கி ஊழியர்கள் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளை பெண் மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, பணிக்கு செல்லும் வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியை கற்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

