Last Updated:
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு உ.பி.யிலிருந்து 20 நபர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்ததாகவும், தொழிலதிபர் ஷாஜாத் வாகாப் சிம் கார்டுகளை வழங்கியதாகவும் தகவல்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவிற்கு எதிராக முக்கியத் தடயங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக, ஹரியானா மாநிலம் ஹசார் பகுதியை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், துபாய், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சென்று வந்ததும், யூடியூப் சேனலை கண் துடைப்புக்காக பயன்படுத்தி அவர் வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது செல்போனில் பாகிஸ்தான் அதிகாரிகளின் பெயரை வேறு பெயர்களில் பதிவு செய்திருந்ததாகவும், என்க்ரிப்ஷன் வசதி உள்ள வாட்ஸ் அப், சினாப்சாட், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பாகிஸ்தானிய முகவர்களுடன் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாஜாத் வாகாப், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முகவர்களுக்கு இந்திய சிம் கார்டுகளை வாங்கிக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ அமைப்பின் நடவடிக்கைகளுக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து 20 நபர்களை தேர்வு செய்து கொடுத்ததாகவும், இந்திய ராணுவம் பற்றிய முக்கியத் தகவல்களை ஷாஜித் வாகாப் பகிர்ந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

