Last Updated:
கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறாக பேசிய ம.பி. அமைச்சர் விஜய் ஷாவை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. விசாரணைக்காக குழுவை அமைக்க உத்தரவிட்டது.
கர்னல் குரேஷி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், மன்னிப்பு கேட்கிறேன் என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம் என, மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆபரேஷன் சிந்துர் குறித்து விளக்கம் தந்து வந்த கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷா பேசியது சர்ச்சையான நிலையில், அவர் மீது வழக்குப் பதிய மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வு, மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க விஜய் ஷா மன்னிப்புக் கேட்டதாகவும், மன்னிப்பு கேட்கப்பட்ட விதம் ஏற்புடையதல்ல என்றும் விமர்சித்தது. முழு தேசமும் விஜய் ஷாவை நினைத்து வெட்கப்படுவதாகவும், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் தாங்கள் பேசுவது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மன்னிப்பு கோர அருகதை இல்லாத அருவருக்கத்தக்க வகையில் அமைச்சர் பேசி உள்ளதாகவும் அதனால் மன்னிப்பை முழுமையாக நிராகரிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர். அதே சமயம், விஜய் ஷாவை, கைது செய்வதற்கு தடைவிதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைக்குமாறு மத்திய பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.
மூன்று அதிகாரிகளும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது எனவும், ஒருவர் பெண் அதிகாரியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையிலான விசாரணைக் குழுவில், இருவர் எஸ்.பி. அந்தஸ்தில் இருக்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர். விசாரணை அறிக்கையை வரும் 28 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
கர்னல் குரேஷி குறித்து அவதூறு.. “ம.பி. அமைச்சர் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம்” – உச்சநீதிமன்றம்

