Last Updated:
சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்ற நிலையில், பி.ஆர்.கவாய் 52ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார். 6 மாதங்கள் பதவியில் இருப்பார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்றுடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சஞ்சீவ் கண்ணாவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது
அப்போது பேசிய அவர், தனி நபர் கடமைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் நிறுவனத்தின் பொது நலன் மற்றும் எண்ணங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறந்த பலம் என்பதை தான் உணர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், அதிகரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க தரவு யுக்தி திட்டமிடலை செயல்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார். ஓய்வுக்கு பிறகு வேறு எந்த அரசு பதவியையும் ஏற்கப்போவது இல்லை என்று தெரிவித்த அவர், சட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட உள்ளதாக விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நாட்டின் 52ஆவது தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 6 மாதங்களுக்கு அவர் தலைமை நீதிபதியாக பதவிவகிக்க உள்ளார்.
May 14, 2025 10:02 AM IST

