Last Updated:
“இன்னும் 10 நாட்களுக்கு பிறகு மோடி பிரதமராக இருப்பாரா என்பது தெரியாது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையில் அமெரிக்காவை அழைத்து வந்து, மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்” என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து பல்வேறுகட்ட ஆலோசனைக்கு பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ஆபரேஷனை இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகள் முகாம் அழிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய கிராமங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்தது. இதனால், தொடர்ந்து போர் பதற்றமும் ஏற்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்கா தலையிட்டு இரு நாட்டுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை கொண்டுவந்ததாக அமெரிக்கா அறிவித்தது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இருநாட்டிடமும், நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்ய இருக்கிறோம். போரை நிறுத்தினால் வர்த்தகம் செய்வோம். இல்லை என்றால் உங்களுடன் வர்த்தகம் செய்யமாட்டோம் எனத் தெரிவித்து இரு நாட்டின் போரை நிறுத்தினேன். வர்த்தகத்தை நான் பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்திருக்க மாட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் சண்டை நிறுத்துவதாக அறிவித்தார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்கியதாக சொன்னா பஞ்சாப் மாநிலம், ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, நேரில் சென்றார். பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாய் பிரதமரின் பயணம் அமைந்தது. மேலும், அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு எனது சல்யூட். நாட்டுக்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர். நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களைப் பழி வாங்கிவிட்டீர்கள்.
அணு ஆயுத பிளாக் மெயிலுக்கு அடி பணிய மாட்டோம். பாகிஸ்தானின் அணு ஆயுத மோசடியை நாங்கள் கடுமையாக சாடினோம். அணு ஆயுதத் தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன். பாகிஸ்தானுக்கு சமீப நாட்களாக தூக்கமே வரவில்லை. இந்தியாவுடன் மோதினால், அழிவு மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். பயங்கரவாத ஆதரவாளர்கள் இப்போது முழுமையான ஆழிவை சந்திப்பார்கள் என்பது தெரியும். சண்டை நிறுத்தம் ஒரு சிறிய இடைவெளிதான். பாகிஸ்தான் தாக்கினால், தக்க பதிலடி கொடுப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “இன்னும் 10 நாட்களுக்கு பிறகு மோடி பிரதமராக இருப்பாரா என்பது தெரியாது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையில் அமெரிக்காவை அழைத்து வந்து, மிகப் பெரிய தவறு செய்துவிட்டார். மோடியின் பெயர் அடுத்த 10 நாட்களில் முழுமையாக கெட்டு விடும். பஹல்காம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளை நமது அரசால் பிடிக்க முடியவில்லை. தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அழுத்தம் வழங்காமல் பேச்சுவார்த்தை நடத்தி என்ன பயன்?
தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். முன்னாள் இருந்த மாநிலத் தலைவர் போல இவர் கிடையாது. நயினார் சிறப்பாக செய்யக்கூடியவர். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தலைமையில் உள்ள சிலரின் பேச்சுக்கு மட்டும் தலையாட்டிப் போனார்.
முன்னாடி இருந்தவரின் அரசியல் வேறு. என்னுடைய அரசியல் வேறு. தற்போது பாஜகவில் அனைவருமே நயினார் நாகேந்திரனுக்கு உதவ வேண்டும். திமுகவிற்கு கொள்கை என்பதே கிடையாது. அரசியல் கொள்கை என்பது முற்றிலும் கிடையாது” என கருத்து தெரிவித்துள்ளார்.

