Last Updated:
இந்திய-பாகிஸ்தான் மோதலில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடத்தி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான், இந்திய எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், கடந்த 9ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள காளி தாண்டாவை சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார்.
அவரின் உடல் பெங்களூருக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, இன்று காலை அவரது சொந்த ஊரான காளி தாண்டாவை அடைந்தது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ஆந்திர தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் ஆகியோர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அவருடைய உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் முரளி நாயக் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் முரளி நாயக் உடல் ஊர்வலமாக வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சற்று தூரம் அமைச்சர் முரளி நாயக் உடலை ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சுமந்து சென்றார்.
தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முரளி நாயக் உடல் அவருடைய சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் இந்தியாவை வாழ்த்தியும் பாகிஸ்தானை தாழ்த்தியும் கோஷம் எழுப்பினர்.

