Last Updated:
மே 8 மற்றும் 9 தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
எல்லைப் பகுதியில் நடந்து வரும் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்தியா, அந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது.
இதையடுத்து மே 8 மற்றும் 9 தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கிய நிலையில், S-400 மற்றும் ஆகாஷ் போன்ற கவசமுறைகளால் இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிடம் முதல்முறையாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட நிலையில், இந்த தாக்குதல் மேலும் தீவிரமடைந்தால், பாகிஸ்தானில் பாதிப்புகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஆகையால், இந்தியாவிடம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்தியாவின் தேடப்படும் பட்டியலில் உள்ள தீவிரவாதிகளை ஒப்படைக்கவும் இந்த பேச்சுவார்த்தையின்போது நிபந்தனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் நீண்ட நாட்களாக இந்தியா கேட்டு வரும் சிந்து நதி நீர் ஒப்பந்த திருத்தம் குறித்தும் இந்தியா நிபந்தனை விதிக்கும். இதுகுறித்து பிரதமர் தலைமையில் கூடும் உயர்மட்ட ஆலோசனையில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jammu and Kashmir
May 10, 2025 12:39 PM IST

