Last Updated:
மே 8 அன்று பாகிஸ்தான் 26 இடங்களை குறிவைத்து தாக்கியது. இந்தியா பதிலடியாக தாக்கி, பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நேற்று (8ஆம் தேதி) பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியாவும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதாவது; “மே 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியது. இந்திய ஜம்மு விமான நிலையத்தை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் துருக்கியின் டிரோன்களை பயன்படுத்தி தாக்க முயற்சித்தது. அதனை நாம் முறியடித்துள்ளோம். வட இந்தியாவில் உள்ள 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. 300 முதல் 400 டிரோன்களை பயன்படுத்தி 36 இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
விதிமுறைகளை மீறி எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை இந்தியாவுக்குள் ஊடுருவவிடாமல் இந்தியா விரட்டி அடித்தது. பொய்களை பரப்பி உலகை தவறாக வழிநடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், தற்போது பாகிஸ்தானின் கீழ்த்தரமான செயல் அம்பலமாகியுள்ளது. தனது அத்துமீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பதிண்டா ராணுவ தளத்தை பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. ஆனால், இந்தியா அதனை வீழ்த்தி தோல்வி அடைய செய்தது. இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என சோதித்த பாகிஸ்தான் தக்க பதிலடியை பெற்றது.
குருத்வாராவை இந்தியா குறிவைத்தது என்பது தவறான தகவல். மதக் கலவரத்தை உருவாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. வழிபாட்டு தலங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. தாக்குதல் மூலம், பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

