Last Updated:
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதற்கான உரிமையை இந்தியா பயன்படுத்தியதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ”அபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கடந்த 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு பஹல்காமில் நடந்த தாக்குதல்தான் மிகக் கொடூரமானது என கூறினார். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடைவதை பொறுக்க முடியாமல் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக விக்ரம் மிஸ்ரி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற டி.ஆர்.எஃப் அமைப்பு குறித்து பல முறை ஐ.நா.விடம் முறையிட்டு இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை அளித்த அறிக்கையில், டி.ஆர்.எஃப் அமைப்பு மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர்பு இருந்தது அம்பலமாகி இருப்பதாக விக்ரம் மிஸ்ரி சுட்டிக்காட்டினார்.
தாக்குதல் நடந்து 2 வாரங்களை கடந்தும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் உரிமையை இந்தியா பயன்படுத்தியதாக விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.
May 07, 2025 12:48 PM IST
Operation Sindoor | எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது ஏன்..? – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கொடுத்த விளக்கம்

