ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா். இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளுமோ என்ற பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீர் தாக்குதல் நடத்தியது.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
