Last Updated:
ஐ.நா. பாதுகாப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டதாக சசி தரூர் தெரிவித்தார்.
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பு முதலில் பொறுப்பேற்றது. பின் அந்த அமைப்பு இதற்கு மறுப்பு தெரிவித்தது. இதேசமயத்தில் தேசிய புலனாய்வு பிரிவு அமைப்பு நடத்திவரும் விசாரணையில், இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. மேலும், ராணுவ பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “பாகிஸ்தானை விமர்சிக்கும் தீர்மானத்தை கவுன்சில் நிறைவேற்றாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் சீனா அதற்கு அனுமதிக்காது. அதேபோல், நம்மை விமர்சித்தும் தீர்மானம் நிறைவேற்றாது. காரணம், பல நாடுகளும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அனுமதிக்காது. இது அமைதி மற்றும் பயங்கரவாதத்தை பற்றிய கவலையை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கலாம்.
இந்த சூழலில் பாகிஸ்தான் தங்களுக்கு ஒரு நன்மை இருப்பதாக நினைத்திருக்கும். ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி கூட்டத்தில் பல பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு கடுமையான கேள்விகளை முன்வைத்ததாக தெரிகிறது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஆரம்பத்தில் அதன் பொறுப்பேற்றல் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பட்டதாக தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


