கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற சாமியாரின் சமாதியில், அவரது நினைவு நாளில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மனித நேயத்திற்கு எதிரானது மட்டுமல்ல… அடிப்படை சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது!
இதற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், `ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினர் மட்டும்தான் இப்படி எச்சில் இலையில் உருள வைக்கப்படுகிறார்கள், இது மனித நேயத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் அடிப்படை சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்க கூடியதாக இருக்கிறது.
எனவே இந்த மோசமான சடங்கு முறையை தடை செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த நடைமுறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த தடை உத்தரவுக்கு எதிராக, நெரூர் மடம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நெரூர் மடம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், `சடங்கில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. இது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். எனவே இந்த சடங்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
