Last Updated:
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்கின்றனர்.
பஹல்காம் பகுதியில் சில நாட்களு முன் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடும் பதற்றத்திற்கு மத்தியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குல்பூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த உள்ளூர் விவசாயியான அஸ்கர் உசேன் ஷா தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தற்போது அங்கிருக்கும் நிலைமையை விளக்கினார். கர்மா, கசாலியா, டாவர் மற்றும் நூர்கோட் போன்ற அருகிலுள்ள பஞ்சாயத்துகள் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, எங்கள் பகுதி இப்போது உஷார் நிலையில் உள்ளது. நடந்த இந்த கோர சம்பவத்தை நினைத்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம் மற்றும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக எங்கள் பகுதியில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழலில் எதுவும் நடக்கலாம் என்பதால் நாங்கள் தயாராக இருக்க விரும்புகிறோம். இதனையொட்டி நாங்கள் தற்போது பயிர்களை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அறுவடை செய்கிறோம். ஏதேனும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, அறுவடையை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
கிராம மக்களுடன் சேர்ந்து மக்காச்சோளம் அறுவடை செய்து கொண்டிருந்த முஷ்டாக், என்ற மற்றொரு விவசாயி பேசுகையில், எல்லையில் துப்பாக்கிச் சூடு நடந்தால் என்ன செய்ய முடியும்? எனவே விவசாயிகளாகிய நாங்கள் பதற்றத்தையும் மீறி விரைவாக வேலை செய்து அறுவடையை முடிக்க முயற்சி செய்கிறோம். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி மிகவும் மோசமாக உள்ளது. அச்சம் காரணமாக விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்யத் தொடங்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். ஸ்ரீ சனாதன் சபாவின் பிரதான் கேத்ரபால் ஷர்மா கூறுகையில், “பஹல்காமில் நடந்த சம்பவத்திற்கு நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து இங்கிருக்கும் மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து வருகின்றன. இந்த தாக்குதல் காரணமாக கோபமாக உள்ள மக்கள் இந்தியா உரிய பதிலடி கொடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த எல்லையோர மாவட்டங்களில் கூட துரதிர்ஷ்டவசமாக, மக்கள் இப்போது அமைதியற்ற நிலையில் உள்ளனர். அறுவடை காலம் என்பதால், மக்கள் தங்கள் பயிர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள், அவற்றைப் பாதுகாக்க முனைகிறார்கள். அமைதியை விரும்பும் இந்தியாவை பாகிஸ்தான் தொடர்ந்து ஆத்திரமூட்டுகிறது. இந்த முறை பஹல்காமில் நடந்தது பயங்கரமானது; இந்து, முஸ்லீம், சீக்கியர் என்று பாகுபாடின்றி பொதுமக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எல்லையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் தாங்கள் தாக்கப்படலாம் என கருதி, அறுவடையை விரைவாக முடிக்க முயல்கின்றனர். இன்னும் இங்கு நிலவும் யதார்த்தத்தை சொன்னால் பயிர்களை அறுவடை செய்யலாமா அல்லது கால்நடைகளுக்கு தீவனமாக அப்படியே விட்டு விடலாமா என்று சில விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். எல்லை தாண்டிய வன்முறையால் பெரும் அழிவை எதிர்கொள்வதை விட, இது போன்ற இழப்புகளை எதிர்கொள்ளலாம் என்று பலரும் கருதுகிறார்கள் என்றார். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் தொடர்ந்து ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தாக்குதலை நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
April 30, 2025 11:24 AM IST


