இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டாளரும் அதானி குழுமத்தின் ஒரு பகுதியுமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் விழிஞ்சம் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தத் துறைமுகம் சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் பங்கை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் திறப்புவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய இந்த நிகழ்வு பலரின் தூக்கத்தையும் கலைக்கப்போகிறது” எனத் தெரிவித்தார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, “இந்தியா கூட்டணியில் நீங்கள் (பினராயி விஜயன்) முக்கியமான தூண் என்பதை முதலமைச்சரிடம் தெரிவித்துக்கொள்கிறேன், சசி தரூரும் இங்கு அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலரின் தூக்கத்தையும் கலைக்கப்போகிறது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் பல சந்தர்ப்பங்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்த நிகழ்வை சசி தரூர் வரவேற்றிருந்தார். அதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்த போது, ‘நம் நாட்டின் நலனை மனதில் வைத்தே பேசினேன். ஒரு அரசியல்வாதி எப்போதுமே, தான் சார்ந்த கட்சியை மனதில் வைத்து பேச முடியாது’ என விளக்கம் அளித்தார்.
அந்த சர்ச்சை அடங்கிய நிலையில், இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் கூறினார். இது காங்கிரஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு சசிதரூர் விளக்கம் அளித்த போதும், எனினும், கேரளா காங்கிரஸ் தலைவர்கள், தொடர்ந்து சசிதரூரை விமர்சித்து வந்தனர். அப்போது சசிதரூர், காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன எனக் கூறி காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார்.
இப்படியாக சசி தரூர் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவரும் நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், சசி தரூரும் கைகுலுக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, “பலரின் தூக்கத்தையும் கலைக்கும் நிகழ்வு இது” என மேடையில் பேசியிருப்பது தற்போது பெரிதும் கவனிக்கப்படுகிறது.
