Last Updated:
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் USBRL ரயில் பாதையில் CRPF வீரர்கள், சிசிடிவி கேமராக்கள், தானியங்கி ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் 272 கி.மீ. நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையில் (USBRL) சுமார் 100 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதைப் பகுதிகளை “அதிநவீன” தானியங்கி ஆயுதங்கள் மற்றும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அணிந்த CRPF வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். மேலும், இந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9ஆம் தேதியன்று உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்த ரயில் பாதையின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், முழு சுரங்கப்பாதையிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல் மற்றும் CRPF வீரர்களைப் பணியமர்த்துதல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இது முடிவு செய்யப்பட்டது. இந்த ரயில் பாதையின் ஒரு முக்கியமான பகுதியை ஏப்ரல் 19ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில், துணை ராணுவப் படைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படைத் தலைவர்கள், ஜம்மு-காஷ்மீர் டிஜிபி மற்றும் ரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்ட ரயில் பாதைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முதல் கூட்டத்தின்போது இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
USBRL இன் 111-கிமீ கத்ரா-பனிஹால் பிரிவு பகுதியானது பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் சவாலான பகுதியாகும், இது இந்தியாவின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதை (12.77 கிமீ), உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலம் (செனாப், 359 மீ) மற்றும் இந்திய ரயில்வேயின் முதல் கேபிள்-தங்கிய பாலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தப் பிரிவில் 97 கி.மீ. சுரங்கப்பாதைகளாக உள்ளது.
துணை ராணுவப் படைகளின் டிஜிக்களில் ஒருவர், அனைத்து சுரங்கப்பாதை பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு அறிவுறுத்தினார். விதிமுறைகளின்படி, அனைத்து ரயில் பாதைகளின் பாதுகாப்பும் மாநில காவல்துறையின் வசம் உள்ளது. எனவே, சுரங்கப்பாதைகளில் CRPF வீரர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ரயில் பாதையின் மீதமுள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக GRP மற்றும் RPF பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு வீரர்களுக்கு “அதிநவீன” தானியங்கி ஆயுதங்கள் மற்றும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 4,500 பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 24 மணி நேரமும் கண்காணிப்பு அறையுடன் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளோம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, மூத்த RPF அதிகாரிகள் ஜம்மு காஷ்மீருக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். தற்போது, சங்கல்தான் மற்றும் பாரமுல்லா இடையேயான 184 கி.மீ. நீளமுள்ள பாதையிலும், USBRLஇன் 25 கி.மீ. நீளமுள்ள உதம்பூர்-கத்ரா பிரிவிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், காஷ்மீர் பள்ளத்தாக்கு செல்ல, திறப்பு விழாவிற்காகக் காத்திருக்கும் மீதமுள்ள 63 கி.மீ. நீளம் கொண்ட கத்ரா-சங்கல்தான் பகுதி இன்னும் இணைக்கப்படாமல் உள்ளது.
April 29, 2025 7:34 PM IST
காஷ்மீர் ரயில் இணைப்பில் சுரங்கப் பாதைகளைப் பாதுகாக்க CRPF வீரர்கள்… சிசிடிவி கேமராக்கள் மற்றும் தானியங்கி ஆயுதங்களுடன் 24 மணி நேர கண்காணிப்பு

