Last Updated:
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இருவரின் செல்போன்களை தீவிரவாதிகள் எடுத்துச் சென்றுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி யாருடனாவது தொடர்பு கொள்கிறார்களா என்று ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணி அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் ஜிப்லைன் ஆப்ரேட்டரிடம் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இதுவரை நான்கு முறை நெருங்கியிருப்பதாகவும், அடர்ந்த காடுகள் என்பதால் தீவிரவாதிகளைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 4 தீவிரவாதிகள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ராணுவம், துணை ராணுவப் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நான்கு முறை நெருங்கியதும், அடர்ந்த காடுகளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பியோடியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து உணவை எடுத்துக் கொண்டு ஓடியதையும் பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.
பஹல்காமின் உயரமான பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கிஷ்த்வார் மலைத்தொடரில், தற்போது பனிப்பொழிவு குறைவாகவே உள்ளதால் தீவிரவாதிகள் இந்த மலைத்தொடரைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. பைசரன் புல்வெளியில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இருவரின் செல்போன்களை தீவிரவாதிகள் எடுத்துச் சென்றுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி யாருடனாவது தொடர்பு கொள்கிறார்களா என்று ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதற்கிடையே, பஹல்காம் துப்பாக்கிச் சூட்டின் போது சம்பவ இடத்தில் இருந்த குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணி அளித்த தகவலை அடுத்து ஜிப் லைன் ஆப்ரேட்டரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பஹல்காமில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தனக்கு நேர்ந்தது குறித்து அங்கு சுற்றுலா சென்றிருந்த குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ரிஷி பட் என்பவர் தெரிவித்து இருந்தார்.
அதில், தான் ஜிப் லைன் சாகசத்தில் ஈடுபட்ட போது அதன் ஆபரேட்டர் மூன்று முறை குரல் எழுப்பிய நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கு முன்பாக 9 பேர் ஜிப் லைனில் சென்ற போது அமைதியாக இருந்த ஆபரேட்டர் சரியாக துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு சமிக்ஞை கொடுப்பது போல் கத்தியதாக தெரிவித்தார். சுற்றுலா பயணி ரிஷி பாட் அளித்த தகவலை தொடர்ந்து ஜிப் லைன் ஆப்ரேட்டரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Jammu,Jammu,Jammu and Kashmir
April 29, 2025 6:51 AM IST

