Last Updated:
ரயில்வேத் துறை செவிலியர் கண்காணிப்பாளர் நுழைவுத் தேர்வில் தாலி, பூணூல் அணிய தடை விதிக்கப்பட்டது. கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இதை எதிர்த்து கருத்து தெரிவித்தார்.
இந்திய ரயில்வே துறையில் செவிலியர் கண்காணிப்பாளருக்கான நுழைவுத் தேர்வு நாளை(29ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்தச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில நெறிமுறைகளால் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் செவிலியர் கண்காணிப்பாளருக்கான கணினி வழியில் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 29 ஆம் தேதி மங்களூரில் உள்ள போண்டேலை தளமாகக் கொண்ட மானெல் ஸ்ரீனிவாஸ் நாயக் பெசன்ட் வித்யா கேந்திராவில் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டில், தாலி மற்றும் பூணூல் ஆகியவற்றை தேர்வர்கள் அணிந்திருக்கக் கூடாது என நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அந்த நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டில் கம்மல், மூக்குத்தி, வளையல்கள் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரயில்வே துறை இணையமைச்சர் வி. சோமண்ணா தலையிட்டு, தேர்வின் போது தேர்வர்கள் இந்த சின்னங்களை அணிவதைத் தடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு முன்பு இந்த மாத துவக்கத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற பொது நுழைவுத் தேர்விலும், இதேபோன்ற நெறிமுறைகள் வழங்கப்பட்டிருந்தன. இதனால், அப்போதே மதம் சார்ந்த நம்பிக்கைகளில் தலையீடுவதாக பெரும் சர்ச்சை வெடித்தது. அதேபோல், தற்போது மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “மதம் சார்ந்த விஷயங்களான தாலி, பூணூல் போன்றவற்றை தேவைப்படும்பட்சத்தில் சோதனை செய்யலாம். ஆனால், அதனை அகற்றச் சொல்வது சரியானது கிடையாது.
காதணிகள், தாலி, பூணூல் அல்லது இடுப்புப் பட்டை போன்றவற்றை அவர்கள் சரிபார்க்கலாம் என்று நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம். அது தவறல்ல. ஆனால், கடந்த காலங்களில், மக்கள் தங்கள் காதுகளில் ஒரு சிறிய சாதனத்தை வைத்திருப்பது போன்ற சில பிரச்சினைகள் இருந்தன. அது சரியல்ல. அதேசமயம் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
April 28, 2025 2:29 PM IST

