Last Updated:
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தாயகமாக நினைத்து வாழ்ந்த இந்தியாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
35 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சாரதா பாய் என்பவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. மேலும், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், 35 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சாரதா பாய் என்பவரும், தற்போது இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஒடிசா காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சாரதா பாயின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய அதிகாரிகள், அவரை விரைவாக பாகிஸ்தானுக்கு திரும்புமாறு தெரிவித்துள்ளனர். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
போலங்கிரில் உள்ள ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்த மகேஷ் குக்ரேஜா என்பவரை சாரதா பாய் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது. அவருக்கு தற்போது ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். வாக்காளர் அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்கள் இருந்தபோதிலும், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்நிலையில், தனது குடும்பத்திடம் இருந்து தன்னைப் பிரிக்க வேண்டாம் என்று சாரதா பாய் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Also Read: காலக்கெடு நிறைவு… இந்தியாவை விட்டு வெளியேறிய 537 பாகிஸ்தானியர்கள்!
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தாயகமாக நினைத்து வாழ்ந்த இந்தியாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாகிஸ்தானில் தனக்கு யாரும் இல்லை என்றும், பாஸ்போர்ட் கூட மிக பழையது என்றும் கூறியுள்ளார். தனக்கு இரண்டு பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர் என்றும், ஒரு இந்தியராக வாழ விரும்புகிறேன் என்றும் சாரதா பாய் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 28, 2025 10:50 AM IST
“அங்கு யாரும் இல்லை.. இந்தியராக வாழ விரும்புகிறேன்” – 35 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் பெண் கதறல்!

