Last Updated:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றவாளிகள் தப்பவிடப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை ஸ்ரீநகரில் சந்தித்தார். அப்போது தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தப்பிக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் ஸ்ரீநகரில் வைக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்ரீநகரில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அமைச்சர் அமித்ஷா, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கனத்த இதயத்துடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதம் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது. இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகள் தப்பவிடப்பட மாட்டார்கள்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள். இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அப்பாவி மக்களைக் கொன்ற இந்த பயங்கரவாதிகள் எந்த சூழ்நிலையிலும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்பதை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், முழு நாட்டிற்கும் உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாதலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அவரவரது சொந்த ஊர்களுக்கு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
Jammu and Kashmir
April 23, 2025 8:11 PM IST

