காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பஹல்காம் விளங்குகிறது. தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான பயணிகள் பனிப் பிரதேசமான காஷ்மீருக்கு படையெடுத்தனர். இதில், செவ்வாய்க்கிழமை அன்று பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர். மதியவேளை என்பதால் பலரும் ரிசாட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த 6 தீவிரவாதிகள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டனர்.
என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் சுற்றலாப் பயணிகள் பலரும், குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். சற்று நேரத்திற்கு முன்பு உற்சாகமாக இருந்தவர்கள், உயிரற்ற சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் கட்டியணைத்து கதறி அழுதது, அனைவரின் கண்களையும் குளமாக்கியது. பார்க்கும் இடமெல்லாம் சடலமாக கிடந்ததால் பைசரன் பள்ளத்தாக்கு முழுவதும் மரண ஓலத்தால் பதைபதைத்தது. இதில், கர்நாடகாவைச் சேர்ந்த பல்லவி, தனது கண்முன்னே கணவர் மஞ்சுநாத்தை பறிகொடுத்த துக்கத்தில் கதறி துடித்தது, தீவிரவாத தாக்குதலில் கோர முகத்தை காட்டியது.
சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பல்லவி, கணவரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளிடம் தன்னையும், தனது மகனையும் சுட்டுக் கொன்று விடுமாறு கெஞ்சியதாக கூறினார். அதற்கு, ஒரு தீவிரவாதி உன்னை கொல்லமாட்டேன் என்றும், இங்கே நடந்ததை உங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் சொல் என கூறியதாகவும் பல்லவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மற்றொரு பெண், தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தனது, கணவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது, பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டுவிட்டு ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஹரியானாவை சேர்ந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலும், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். 26 வயதான இவருக்கு 6 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. பஹல்காமுக்கு தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவி கண்முன்னே கொல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று, பிகாரைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சனும், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் மூன்று வெளிநாட்டினர் உட்பட 29 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய TRF எனப்படும் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளி மாநிலத்தவர், முஸ்லீம் அல்லாதவர் மற்றும் ஆண்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக உள்ளுர் மக்கள் தெரிவித்துள்னர். குறிப்பாக, தீவிரவாதிகளில் சிலர், இந்திய ராணுவ உடையில் வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள், எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கு பின்னால் உள்ள தீவிரவாத அமைப்பு எது என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை லெப்டினட் வினய் நர்வாலுக்கு அவரது மனைவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரை கலங்க செய்தது. ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் செய்த இந்த ஜோடி, தேனிலவுக்காக பஹல்காம் சென்ற நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலில் வினய் நர்வால் கொல்லப்பட்டார். இந்த நிலையில், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பெட்டியில் வைக்கப்பட்ட வினய் நர்வால் உடலுக்கு அவரது மனைவி கதறி அழுது பிரியாவிடை கொடுத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தோரை மட்மில்லாது காண்போரையும் கலங்கவைத்துள்ளது.
Jammu and Kashmir
April 23, 2025 5:50 PM IST
