உள்நாட்டு எஃகு தொழில்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த வரி தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வரியானது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இருநூறு நாட்களுக்கு (திரும்பப் பெறப்படாவிட்டால், மாற்றியமைக்கப்படாவிட்டால் அல்லது திருத்தம் செய்யப்படாவிட்டால்) நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் கீழ் வரும் பொருட்களில் உலோகக் கலவை மற்றும் உலோகக் கலவை அல்லாத ஸ்டீல் பிளாட் தயாரிப்புகளான ஹாட் ரோல்ட் காயில்ஸ், ஷீட்ஸ் மற்றும் பிளேட்ஸ், ஹாட் ரோல்ட் பிளேட் மில் பிளேட்ஸ், கோல்ட் ரோல்ட் காயில்ஸ் மற்றும் ஷீட்ஸ், மெட்டாலிக் கோட்டட் ஸ்டீல் காயில்ஸ் மற்றும் ஷீட்ஸ், கால்வனீல், ஜிங்க் அல்லது அலுமினியம்-ஜிங்க் அல்லது ஜிங்க்-அலுமினியம்-மெக்னீசியம் மற்றும் கலர் கோட்டட் காயில்ஸ் மற்றும் ஷீட்ஸ் ஆகியவை அடங்கும்.
“உள்நாட்டுத் தொழிலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்பு மற்றும் அச்சுறுத்தலை தவிர்க்க 12% தற்காலிக பாதுகாப்பு வரி விதிப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று கருதுவதாக” மத்திய அரசு இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளது. இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஸ்டீல் நிறுவனங்களில் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பூஷன் பவர் & ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவை அடங்கும்.
இதையும் படிக்க: இந்தியாவிற்கு 2 புல்லட் ரயில்களை பரிசாக வழங்கும் ஜப்பான்…! விரைவில் சோதனை ஓட்டம்…
மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி பாதுகாப்பு வரி விதிக்கும் முடிவை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். “இந்த நடவடிக்கை உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களை அதிகரித்து வரும் இறக்குமதி தாக்கத்திலிருந்து பாதுகாக்க, சந்தையில் நியாயமான போட்டி நிலவுவதை உறுதிப்படுத்தவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அவசியமான நடவடிக்கை” என்று மத்திய எஃகு அமைச்சகம் (ministry of steel) தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த மாதம், வர்த்தகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் வரும் வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குநரகம் (டிஜிடிஆர்), மலிவு விலை இறக்குமதியைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சில ஸ்டீல் பொருட்களுக்கு 200 நாட்களுக்கு 12% தற்காலிக வரி விதிக்க பரிந்துரைத்தது. இந்தியாவின் உள்நாட்டு எஃகுத் தொழிலுக்கு தடையற்ற இறக்குமதிகள் பாதிப்பை ஏற்படுத்தியதா என்பது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த பரிந்துரை கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…
எனினும், “ஸ்டீல் இறக்குமதியின் மீது பாதுகாப்பு வரிகளை விதிப்பது பொருத்தமான சட்ட மற்றும் பொருளாதார நியாயம் இல்லாததால் இந்த நடவடிக்கைக்கு எதிராக MSME துறை குரல் கொடுக்கும்” என்று SME மன்றத்தின் தலைவர் வினோத் குமார் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஸ்டீல் இறக்குமதியின் மீதான 12% பாதுகாப்பு வரிகள், தன்னிச்சையான தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளுடன் (QCOs) இணைந்து, இந்தியாவின் MSME- ஆதிக்கம் செலுத்தும் கீழ்நிலைத் துறைகளை அச்சுறுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 22, 2025 3:38 PM IST
