Last Updated:
பெங்களூருவில் தனது மனைவியுடன் ஷிலாதித்யா காரில் விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் காரை வழிமறித்து வம்பிழுத்ததாக கூறப்பட்டது.
பெங்களூருவில் விமானப் படை அதிகாரி தாக்கப்பட்ட குற்றச்சாட்டில், திடீர் திருப்பமாக அவர் மீதே போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளைஞரை கொடூரமாக தாக்கிவிட்டு, அப்பாவி போன்று நடித்தவரின் வேஷம் சிசிடிவி மூலம் கலைந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விமானப் படை தளத்தில் விங் கமாண்டராக பணியாற்றி வருபவர் ஷிலாதித்யா போஸ். இவரின் மனைவி மதுமிதா பெங்களூருவில் உள்ள டிஆர்டிஓ குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் தனது மனைவியுடன் ஷிலாதித்யா காரில் விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் காரை வழிமறித்து வம்பிழுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக இளைஞர் தாக்கியதில், தனது கழுத்து மற்றும் நெற்றி, மூக்கு பகுதியில் ரத்தக் காயம் ஏற்பட்டதாக விங் கமாண்டர் வீடியோ வெளியிட்டார். குறிப்பாக, கன்னட மொழியில் பேச கூறி தன்னையும், தனது மனைவியையும் தாக்கியதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஷிலாதித்யாவின் வேஷம் கலைந்துள்ளது.
இது தொடர்பாக விகாஷ் என்ற இளைஞர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சம்பத்தின்போது விகாஷ், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவ்வழியாக விமானப் படை அதிகாரி ஷிலாதித்யா சென்ற கார் பைக்கின் சைலன்சரில் உரசியுள்ளது. இது தொடர்பாக விகாஷ், காரை மடக்கி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, ஷிலாதித்யாவின் மனைவி மதுமிதா இளைஞருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது, திடீரென அந்த இளைஞரை விமானப் படை அதிகாரி சரமாரியாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில், ஆஜானுபாகு உடல் அமைப்பை கொண்ட ஷிலாதித்யா, தன்னை ஒரு குத்துச்சண்டை வீரராக எண்ணிக்கொண்டு இளைஞரின் முகத்தில் தொடர்ந்து குத்து விட்டுள்ளார். மேலும், அவரின் செல்போனை பறித்து எறிந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட முயற்சித்தபோதும், விமானப் படை அதிகாரியும், அவரின் மனைவியும் அத்துமீறியது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது.
இது தொடர்பாக போலீசார் விமானப் படை அதிகாரி ஷிலாதித்யா மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்தனர். அத்துடன், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வழிப்பறி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தள்ளனர். கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த ஷிலாதித்யா போஸ் மேற்குவங்கம் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய பெங்களூரு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். பெங்களூருவில் சாலையில் இருவருக்கு இடையே நடந்த சண்டையை, மொழி பிரச்சினையாக்கும் நோக்கில் வீடியோ வெளியிட்ட விமானப் படை அதிகாரியின் கபட நாடகம், சிசிடிவி மூலம் அம்பலமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
April 22, 2025 4:50 PM IST
கன்னட மொழி பேச சொல்லி தாக்குதா..? சிசிடிவியால் வௌிச்சத்துக்கு வந்த விமானப் படை அதிகாரியின் கபட நாடகம்!

