Last Updated:
ஓம் பிரகாஷின் வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான தடயங்கள் இல்லாத நிலையில், காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஓம் பிரகாஷின் மனைவி பல்லவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் ஓய்வுபெற்ற டிஜிபி ஓம் பிரகாஷ் படுகொலை தொடர்பாக அவரது மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரை சேர்ந்த ஓம் பிரகாஷ், கடந்த 2015ஆம் ஆண்டு கர்நாடக டிஜிபியாக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை கொடுமைக்காரரான தனது கணவனை கொலை செய்துவிட்டதாக ஓம் பிரகாஷின் மனைவி, ஓய்வுபெற்ற மற்றொரு காவல்துறை அதிகாரியின் மனைவியிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் ஓம் பிரகாஷின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றினர்.
அப்போது வீட்டில் ஓம் பிரகாஷின் மனைவி மற்றும் மகள் மட்டும் இருந்துள்ளனர். ஓம் பிரகாஷின் வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான தடயங்கள் இல்லாத நிலையில், காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஓம் பிரகாஷின் மனைவி பல்லவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ஓம் பிரகாஷின் குடும்பத்தினருக்குள் சொத்துப் பிரச்சனை இருந்தது தெரியவந்துள்ளது.
ஓம் பிரகாஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் ஓம் பிரகாஷ் தெரிவித்திருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 21, 2025 12:12 PM IST

