Last Updated:
மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற உத்தரவை முதல்வர் ஃபட்னாவிஸ் விளக்கினார். மராத்தி கட்டாயம், இந்தி மாற்று மொழியாக அனுமதி.
பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில், புதியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருக்கும் மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் அந்த மாநிலத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கியது. இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
அதேபோல், மகாராஷ்டிரா மாநில அரசுக்கு மொழி ஆலோசனைக் குழு, மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுமாறு பரிந்துரை செய்தது. மேலும், மராத்தி, ஆங்கிலத்துடன் சேர்த்து 3ஆவது மொழியாக இந்தியை சேர்ப்பது மாணவர்களுக்கு சுமை எனவும் தெரிவித்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு கடிதமும் எழுதியது.
மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கியது மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாநிலத்தில் மராத்தி மொழி கட்டாயம். இந்தி கட்டாயம் அல்ல. அதே சமயம் இந்தி மாற்று மொழியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் ஆங்கிலத்தை நெருக்கமாகவும், இந்தியை தொலைவில் வைத்தும் பார்க்கிறோம். இந்திய மொழியான இந்தியை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாணவர்கள் மூன்றாவதாக எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம். இந்தி மூன்றாவது மொழியாக வந்தால் அதற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
வேறு ஏதேனும் இந்திய மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுத்தால் அதனை அரசு அனுமதிக்கும். ஆனால், அந்த மொழி பிரிவை குறைந்தது 20 மாணவர்களாவது தேர்ந்தெடுத்தால் தான் ஆசிரியரை நியமிக்க முடியும். அப்படி இல்லை என்றால் இணைய வழியில் வகுப்பு எடுப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறோம்” எனத் தெரிவித்தார்.
April 21, 2025 6:03 PM IST
துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம்.. வலுத்த எதிர்ப்பும்.. முதல்வர் ஃபட்னாவிஸ் கொடுத்த விளக்கமும்

