ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராம்பன் மாவட்டம் ஸ்ரீ பக்னா என்ற கிராமத்தில் ஞாயிறு அதிகாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதேபோல, செனாய் நதிக்கு அருகே உள்ள தரம்குண்ட் பகுதியில் இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், 40க்கு மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நதியில் ஏற்பட்ட வெள்ளம் கிராமத்தில் புகுந்ததால் வீடுகள், மின் கம்பங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் 100-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக மீட்டனர். மறுபுறம் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த வாகனங்கள், வீடுகள் மண்ணில் புதைந்தன.
நிலசரிவால் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மீட்பு பணி
மழையின் தீவிரம் சற்று குறைந்ததை அடுத்து, நிலச்சரிவில் சிக்கியுள்ள வீடுகள், வாகனங்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மீட்பு பணியில் இந்திய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மற்றும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் குமார் சவுத்ரி, ராம்பன் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், இயற்கை சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தங்களுக்கு, சிறப்பு நிதி ஒதுக்கி இழப்பீடுகளை விரைவில் வழங்க வேண்டுமென்பதே பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Jammu,Jammu,Jammu and Kashmir
April 21, 2025 9:29 AM IST
மேக வெடிப்பு: ஜம்மு காஷ்மீரில் திடீர் மழை வெள்ளம், நிலச்சரிவால் உயரும் பலி எண்ணிக்கை… மீட்பு பணி தீவிரம்

