அப்படியென்ன கோபம்?
“இந்தளவுக்கு, மல்லை சத்யா மீது துரை வைகோவுக்கு அப்படியென்ன கோபம்..?”, கேள்வியுடன் ம.தி.மு.க-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “மதுராந்தகம் ஆறுமுகத்தினால் வைகோவிடம் அறிமுகமானவர்தான் மல்லை சத்யா. 1993-ம் ஆண்டிலிருந்து வைகோவுடன் தொடர்ச்சியாக பயணமாகி வருகிறார். குங்பூ, கராத்தே பயிற்சி பெற்றவரான சத்யாவை வம்பு சண்டைக்கெல்லாம் போகவிடாமல், அரசியல்ரீதியாகப் பக்குவப்படுத்தியவர் வைகோதான். 1996-ல், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பொறுப்பு சத்யாவுக்கு வைகோவினால்தான் கிடைத்தது. இந்தக் கட்சியில், அதிகமுறை சீட் பெற்றவர்களுள் சத்யாவும் ஒருவர். செங்கல்பட்டு, எழும்பூர், திருப்போரூர், மதுராந்தகம் என ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தொகுதிகளை மாற்றிப் பார்த்தும் அவர் வெற்றிப்பெறவில்லை. 2014-ல், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக்கினார் வைகோ. அப்போதும் வெற்றிப்பெறவில்லை. இந்தச் சூழலில், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் சீட் பெற இப்போதிருந்தே காய் நகர்த்தத் தொடங்கிவிட்டார் மல்லை சத்யா. அதை துரை வைகோ ஏற்கவில்லை என்பதுதான் பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டது.
‘தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவுபவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கு ஒதுக்கப்படும் சீட்டில், இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாமே…’ என துரை வைகோ கட்சித் தலைவரிடம் கேட்கப் போக, அது பஞ்சாயத்தாகிவிட்டது. சமீபத்தில், தி.மு.க மேலிட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மல்லை சத்யா தரப்பிலிருந்து சந்தித்தவர்கள், தி.மு.க-வில் சேர்வது குறித்துப் பேசியிருக்கிறார்கள். அதற்கு, ‘கூட்டணிக் கட்சியாக இருக்கிறீர்கள். இந்தச் சூழலில், நீங்கள் அங்கிருந்து இங்கே வருவது சரியாக இருக்காது. உங்கள் கட்சித் தலைமையின் ஒப்புதலோடு வருவதாக இருந்தால் சொல்லுங்கள், தி.மு.க தலைமையிடம் பேசிப் பார்க்கலாம்…’ என்றிருக்கிறார் அந்த மேலிட குடும்பப் பிரமுகர். இவையெல்லாம் துரை வைகோவின் காதுக்குச் சென்றவுடன், அவர் டென்ஷனாகிவிட்டார். அதன் வெளிப்பாடுதான் இந்த முட்டல் மோதல்” என்கிறார்கள்.
பரபரப்பான சூழலுக்கு இடையே, ம.தி.மு.க-வின் நிர்வாகக் குழு கூட்டம், கட்சியின் தலைவரான வைகோவின் தலைமையில் நாளை நடைபெறவிருக்கிறது. ‘மல்லை சத்யாவை பொறுப்பிலிருந்து நீக்கியே ஆக வேண்டும்’ என விடாப்பிடியாக நிற்கிறது துரை வைகோ தரப்பு. ‘நீக்கம்தான் முடிவென்றால், நாங்களும் தடாலடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும். அந்தச் சூழலுக்குள் கட்சித் தலைவர் எங்களை தள்ளிவிட மாட்டார்..’ என பதிலுக்கு முறுக்குகிறது மல்லை சத்யா தரப்பு. ‘மகனா.. மல்லை சத்யாவா…’, என்ன முடிவெடுக்க போகிறார் வைகோ என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.
