வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மத உரிமைகள் வழங்கி உள்ள நிறுவனங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.
திமுக சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் வில்சன், வக்ஃப் சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்தின் 26, 300A பிரிவுகளுக்கு எதிரானது என்றார்.
தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 5 ஆண்டுகள் மதத்தைப் பின்பற்றினால்தான் நன்கொடை வழங்க முடியும் என்பது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறினார்.
மனுதாரர்கள் வாதங்களுக்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாடாளுமன்ற கூட்டுக் குழு விரிவான கருத்து கேட்டு சட்டம் இயற்றப்பட்டதாகவும், பதிவு செய்யாத எந்த சொத்தையும் வக்ஃப் சொத்தாகப் பயன்படுத்த முடியாது என்றும் கூறினார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறை இல்லை எனவும், 14, 17ஆம் நூற்றாண்டுகளில் கூட சொத்துகள் வக்ஃப்க்கு தானமாக அளிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், வக்ஃப் சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா? எனவும், 22 உறுப்பினர்களில் 8 பேர் மட்டுமே எவ்வாறு இஸ்லாமியர்களாக இருக்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பினர்.
இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா? என்றும், திருப்பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? எனவும் வினவினர். ஏற்கனவே வக்ஃப் என்று பதியப்பட்ட சொத்துகள், புதிய சட்டத்தின்படி செல்லாதது என்று அறிவிக்கப்படுமா? எனவும் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.
அவற்றுக்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இரண்டு பேர் மட்டுமே இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக இருப்பார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாடு அரசு கோயில் அர்ச்சகர்களை நியமனம் செய்வதையும் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் பதிலில் திருப்தி இல்லை எனக் கூறிய நீதிபதிகள், மத்திய அரசு விரிவான பதிலை எழுத்துப் பூர்வ பிரமாணப் பத்திரமாக வழங்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் சொத்துக்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடரலாம், ஆனால் நடவடிக்கை மேற்கொள்ளும் விதி அமலுக்கு வராது என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,
வக்ஃப் வாரியம் மற்றும் கவுன்சிலைப் பொறுத்தவரை, 2 அதிகாரப்பூர்வ உறுப்பினர்களை நியமிக்கலாம் எனவும், மற்ற அனைத்து உறுப்பினர்களும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, விரிவான பதில்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், இடைக்கால உத்தரவுகளை நிறுத்தி வைக்கக் கோரினார்.
இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்ததோடு, இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக அறிவித்தனர். வழக்கு விசாரணை முடிவடைய 6 மாதங்கள் ஆகும் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
April 17, 2025 6:43 AM IST

