புது தில்லி: ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதலை மத்திய அரசு நிகழ்த்துகிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸை குறிவைத்து அமலாக்கத் துறை எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கபில் சிபல். மத்திய அரசு விசாரணை முகமைகளை பயன்படுத்தி காங்கிரஸை ஒடுக்க பார்க்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலில் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் பல்லாண்டுகள் முக்கிய அங்கமாக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்த நிலையில், காங்கிரஸில் எழுந்த உள்கட்சி பூசலால் அக்கட்சியின் மீதான அதிருப்தியால் காங்கிரஸிலிருந்து அவர் திடீரென விலகினார். அதனைத்தொடர்ந்து, சமாஜவாதி கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினரானார் கபில் சிபல்.
கபில் சிபல் இன்று(ஏப். 13) தில்லியில் செய்தியாளர்களுடன் பேசியிருப்பதாவது:
சொல்லளவில் மட்டுமே நாம்(இந்தியா) ஜனநாயகத்தின் தாயகமாகத் திகழ்கிறோம். ஆனால், நிஜத்தில்… நீங்கள்(மத்திய பாஜக அரசு) சர்வாதிகாரத்தின் தந்தையாக இருக்கிறீர்கள்!
அவர்கள்(பாஜக) ஹிந்து – முஸ்லிம் பிரிவினைவாத கொள்கையில் பிடிப்புண்டு, தங்களது அரசியல் கணக்கை நடத்தி விரும்புகிறார்கள். இதன்மூலம், எதிர்க்கட்சிகளை வீழ்த்த துடிக்கிறார்கள் என்றார்.
