Last Updated:
கர்நாடகாவில் பழங்குடியின சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் திருட்டில் ஈடுபட்டதாக கூறி பழங்குடியின சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, கடுமையாக தாக்கியும், எறும்புகளை விட்டு கடிக்க வைத்தும் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுக்கா அஸ்தபனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுவன் காட்டுப் பகுதியிலிருந்து மூலிகைகளை சேகரித்து விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த சிறுவனை கடந்த 3 ஆம் தேதி ஒரு கும்பல் பிடித்து இழுத்து சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து வெறிப்பிடித்த அந்த கும்பல் சிறுவன் மீது திருட்டு பட்டம் கட்டி அவரை அரை நிர்வாணமாக்கி பாக்குமரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், அந்த சிறுவனின் உள் ஆடைக்குள் எறும்புகளை விட்டு கடிக்க வைத்து கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்துள்ளார். மேலும் சிறுவன் அலறுவதைப் பார்த்து அவரைப் போலவே மிமிக்கிரி செய்தும் அந்த கும்பல் சிரித்து ரசித்துள்ளது. அந்த சிறுவனுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி மற்றொரு சிறுவன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பரவிய நிலையில் இதுதொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 3 ஆம் தேதியே அரங்கேறியிருந்தாலும், இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட பின்னரே அது பொதுமக்களின் கவனத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தாவங்கேரி காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் தெரிவித்துள்ளார். சிறுவனை ஒரு கும்பல் கொடூரமாக நடத்தியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
April 08, 2025 7:34 PM IST
பழங்குடியின சிறுவனை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை.. அந்தரங்க உறுப்பில் எறும்புகளை கடிக்க வைத்த கொடூரம்..!

