இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமையையும் நிலைநிறுத்தி இருப்பதாக” தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டது, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் குறுக்கீடு உள்ளிட்டவற்றை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
இதையும் படியுங்கள் : உச்சநீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
அதன்படி, மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு, மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது, அல்லது நிறுத்தி வைப்பது அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது என மூன்று வாய்ப்புகள் மட்டும் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது என்றும் ஆளுநருக்கு என்று ‘வீட்டோ’ அதிகாரம் கிடையாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
எனவே சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து அதிரடி உத்தரவிட்டனர். வேறு வழியில்லாத காரணத்தால் தனி அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக ஒப்புதலை நிறுத்தி வைத்தால், அதற்கான காரணத்துடன் மூன்று மாதங்களுக்குள் மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும், மசோதா இரண்டாவது முறையாக பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
அரசியலமைப்பு பிரிவு 200-இன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளதாக கூறப்படுவது ஏற்புடையதல்ல என்று கூறிய நீதிபதிகள், அரசியல் நோக்கங்களால் வழிநடத்தப்படாமல், ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
பொதுவான விதியின்படி ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் ஆளுநர் அலுவலகம் ஊக்கசக்தியாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு.. நீட் விவகாரத்திற்கு புது வழி? – வழக்கறிஞர் வில்சன் விளக்கம்
அரசியலமைப்பு சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதனை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும் என்று ஆளுநர் வழக்கில் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள்காட்டி நீதிபதிகள் தீர்ப்பை நிறைவு செய்தனர்.
இந்தத் தீர்ப்பு வந்ததும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாக” மகிழ்ச்சி தெரிவித்தார். சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்ட விரோதம் என்றும், அந்த சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநரே ஒப்புதல் அளித்ததாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும் கூறினார். திமுக-வின் உயிர்நாடியான மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை நிலை நாட்டும் வகையில் தமிழ்நாடு போராடும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதேபோல், இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், “சட்டமன்றத்தின் அதிகாரங்களை அபகரிக்க முயற்சிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி” என்றும் கூறியுள்ளார். மேலும், “தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமையையும் நிலைநிறுத்தி இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
April 08, 2025 5:58 PM IST
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு.. கூட்டாட்சி அமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது – பினராயி விஜயன் வரவேற்பு
