திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக, வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது. பதிலுக்கு, “திரள்நிதி சீமான்’ என்று சீமான் மீது சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியதோடு, டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எஸ் மாநாட்டில், ‘நாம் தமிழர் கடைசி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்’ என்று பேசி, அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண் குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அந்த வழக்கு தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றைய தினம் வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. ஆனால், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகவில்லை.
