Last Updated:
நாட்டின் சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வக்ஃப் மசோதா ஒரு திருப்புமுனையாகும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது, நாட்டிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வக்ஃப் வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர காரசார விவாதத்திற்குப் பிறகு நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நள்ளிரவு 2.45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 95 பேர் வாக்களித்தனர். இதன்மூலம் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய மசோதா நிறைவேறியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு மசோதா சட்ட வடிவம் பெற உள்ளது.
இந்நிலையில் மசோதா குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் ஆகும். நாட்டின் சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வக்ஃப் மசோதா ஒரு திருப்புமுனையாகும். நீண்டகாலமாக குரல்களற்று, வாய்ப்புகள் வழங்கப்படாமல் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு இந்த சட்டம் பயனளிக்கும்.
இந்த மசோதாக்களுக்கு ஆதரவளித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி. இப்போது இந்தியா சமூக நீதியை முன்னிலைப்படுத்தும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் நவீன சட்ட கட்டமைப்புக்குள் நுழைகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனின் கண்ணியத்தையும் பாதுகாப்பது முக்கியமான இலக்காக இருக்கிறது. இதன் மூலம் ஒருமைப்பாட்டையும், கருணையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வலுவான இந்தியாவை உருவாக்க முடியும்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
April 04, 2025 12:46 PM IST
வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.. பிரதமர் மோடி பெருமிதம்!

