அப்போது உரையாற்றிய கிரண் ரிஜிஜு, “இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, மாநில அரசுகள், சிறுபான்மை ஆணையங்கள், வக்பு வாரியங்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
பின்னர், மக்களவை, மாநிலங்களவை பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) அமைத்தோம். அதன் பிறகு, JPC மீது பலர் சந்தேகம் எழுப்பினாலும், நேற்று மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இன்றைய நிலவரப்படி, 8.72 லட்சம் வக்பு சொத்துக்கள் இருக்கின்றன. 2006-ல் 4.9 லட்ச வக்பு சொத்துக்களின் வருமானம் ரூ. 12,000 கோடி என்று சச்சார் கமிட்டி மதிப்பிட்டிருந்தால், இன்றைய சொத்துக்களின் வருமானத்தை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.

இந்த மசோதா மீதான விவாதத்தின் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது, வக்பு வாரியத்துக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வக்ஃப் வாரியத்தில் நடக்கும் முறைகேடுகளைப் போக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். சில அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு வங்கிக்காகப் பொய்களைப் பரப்புகின்றன.
