Last Updated:
மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர்களின் நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மேற்கு வங்க அரசால் நியமிக்கப்பட்ட 25,000 ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசால் மாநில பள்ளி சேவை ஆணையம் மூலம் 25,000 ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி, மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர்.
இதற்கான தேர்வை சுமார் 23 லட்சம் பேர் எழுதிய நிலையில், பல இடங்களுக்கு பணம் கொடுத்து பணிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, 23 லட்சம் தேர்வுத்தாளையும் எப்படி சரிபார்த்தார்கள் என்ற சரியான விளக்கம் இல்லை எனக்கூறி, 25,000 ஆசிரியர்களின் பணி நியமனங்களையும் ரத்து செய்தது. தொடர்ந்து ஆசிரியர்கள் இத்தனை ஆண்டுகள் வாங்கிய சம்பளத்தையும் மீண்டும் வழங்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சீவ் குமார் அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்தியது.
இதையும் படிக்க: “வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்த மொத்த நியமனங்களிலும் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட 25,000 ஆசிரியர்களும் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவர்களின் சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.
April 03, 2025 11:59 AM IST


