“பனையூர் அப்டேட்!’
மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி என நடத்தி திடீர் பேசுபொருளாகி மறைந்து விடுகிறது தவெக. பிப்ரவரியில் ஆண்டு விழா, மார்ச்சில் பொதுக்குழுக் கூட்டம் என நடத்தி முடித்தவர்கள், இந்த மாத இறுதியில் பூத் கமிட்டி மாநாடை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், மாற்றுக்கட்சியினர் சிலர் தவெகவில் இணைய ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் விஜய்யை சுற்றியிருக்கும் ஒரு `பவர்புல்’ டீம் அதற்கு முட்டுக்கட்டையாக நிற்பதாகவும் பனையூர் வட்டாரத்தில் அரசல் புரசலாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பின்னணி என்ன?
சில மாதங்களுக்கு முன்பு, தமிழ் தேசியம் பேசும் ஒரு கட்சியின் முக்கிய பெண் நிர்வாகி ஒருவர் அந்தக் கட்சியில் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்து உள்ளூர் தவெக நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கியிருக்கின்றனர். இந்தத் தகவல் தலைமைக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் வந்தால் நம் கட்சிக்கு பலம்தான். பெண்கள் மத்தியில் இன்னும் வலுப்பெறுவோம் என விஜய்யும் அந்த பேச்சுவார்த்தைக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.
