Last Updated:
மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பெருமிதம் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உயிரிழப்புகள் குறித்து பேச வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். மேலும், மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி, மகா கும்பமேளா குறித்து கருத்து தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அவர், “மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டதாக” பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிரயாக்ராஜின் மகா கும்பமேளா குறித்து பேசுவதற்காக நான் இங்கு இருக்கிறேன். மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்ததற்காக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர். இந்திய மக்களுக்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் மற்றும் பிரயாக்ராஜுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் செங்கோட்டையில் பேசும்போது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம் என்று தெரிவித்திருந்தேன். தற்போது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பிரம்மாண்டத்தை கண்டது. நமது பலத்தை சந்தேகத்துடன் பார்ப்பவர்களுக்கு இது தகுந்த பதிலை கொடுத்துள்ளது” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து, மகா கும்பமேளாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் பிரதமர் பேச வேண்டுமென வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், உரையை முடித்துக்கொண்டு அவையில் இருந்து பிரதமர் வெளியேறினார். தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
March 18, 2025 3:51 PM IST

